FLASH

பல லட்ச ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் ஆதிமனிதன் வாழ்ந்திருக்கிறான்

Updated by admin on Sunday, October 03, 2021 10:37 PM IST

Chennai: சென்னை மாதம் பாகம் 1 Chennai Month – part 1 :  வரலாற்று காலத்திற்கு முன் இருந்த தொன்மையான சென்னையில் ஆதிமனிதர்கள் - 

பல லட்ச ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் ஆதிமனிதன் வாழ்ந்திருக்கிறான்:
 
(சென்னை 2000 ப்ளஸ் அறக்கட்டளை கொண்டாடும் இந்த சென்னை மாதத்தில் தினந்தோறும் ஒரு செய்தி, ஒரு அறிக்கை வெளியிடப்படும்.  வாருங்கள், தொன்மையான சென்னையின் உண்மையான வரலாற்றைத் தெரிந்து கொள்வோம். உற்றார் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்)
 
 சென்னையின் வயது 382  அல்ல. ஓ , சென்னையின் வயது 2,000 என்று சிலர் சொல்கிறார்களே, அதை சொல்கிறீர்களா என்று என்னிடம் கேட்டனர். எப்படி சென்னையின் வயது 382 என்று சொல்வது மிகப்பெரிய தவறோ, அது போல சென்னையின் வயது 2,000 என்று சொல்வதும் தவறு தான். இந்த கேள்விக்கு அருமையான பதில் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் டாக்டர் எஸ். கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் பல ஆண்டுகளுக்கு முன்னர் தந்தார். சென்னை எவ்வளவு பழமையானது என்றால் அதன் வயதை யூகிக்க முடியாது. பல பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான சென்னையின் வயதை கணக்கிட முடியாத அளவிற்கு பழமையானது என்று சொன்னார். அது தான் உண்மை. சென்னை 2000 ப்ளஸ் என்பது எதைக் குறிக்கிறது?  பல லட்ச ஆண்டுகளுக்கு முன்னரே இங்கே மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்பதை வேறு எப்படி சொல்லி புரியவைப்பது?
அடுத்த கேள்வி வருகிறது. இதற்கு ஆதாரம் இருக்கா?

முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். எனவே மெட்ராஸ் டே என்று சொல்லி நகரத்திற்கு வயது 382 தான் , அதாவது ஈஸ்ட் இந்தியா கம்பெனி சென்னைக்கு வந்த நாள் முதல் தான் சென்னையின் வரலாறு, அதற்கு முன்னாள் எதுவும் கிடையாது என்று ஆங்கிலேயர்கள் மீது கொண்ட மோகத்தால் அப்படி ஜால்ரா அடிக்கிறார்கள். எனவே ஆங்கிலேயர்களின் ஆதாரங்களை அவர்களின் முன்னாள் வைத்து அவர்களை திருத்தலாம், சென்னையின் உண்மையான வரலாறு (2000 +) என்பதை நிலைநாட்டலாம் என்ற ஒரு நப்பாசை. 

கொலோனல் காலின் மெக்கென்சி
ஆகவே நாம் ஆதாரங்களுக்கு எடுத்து கொள்வது ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு துப்பறிவாளன் அல்ல, அவர் ஒரு ஆராய்ச்சியாளர். ஸ்காட்லாந்தின் ராணுவ அதிகாரி கொலோனல் காலின் மெக்கென்சி.  இவர் தான் பின்னால் இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரல், கொலோனல் காலின் மெக்கென்சி. 
 
அவருக்கு  ராணுவ பணியை தவிர இங்கிலாந்து கொடுத்த இன்னொரு பணி -- இந்தியர்கள் குறிப்பாக தென் இந்தியர்கள் எப்படி கணக்கில் புலியாக இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்பது தான். இப்படியாக தொடங்கிய அவனது பணி. ஆனால் காலப் போக்கில் அவன் இந்தியர்களின் புத்தி கூர்மையும் அறிவையும் கண்டு வியந்தான். பல அறிஞர்களுடன் ஏற்பட்ட சந்திப்பிற்கு பிறகு அவன் எங்கு சென்றாலும் ஒவ்வொரு இடத்தைப் பற்றிய செய்திகளை, குறிப்புகளை, ஆவணங்களை சேகரித்து அவைகளை மும்முரமாக படிக்க படிக்க அவருக்கு இந்திய வரலாற்றை முழுவதும் தெரிந்துகொள்ளவேண்டும் அதை பதிவு செய்ய வேண்டும் என்றொரு ஆசை ஏற்பட்டது அதுவே அவ அவ வாழ்க்கையின் லட்சியமாக கொண்டார்.
 
மெக்கென்சி 1754 -ல் ஸ்காட்லாந்தில் பிறந்தார். அவர் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி, 1783 -ல் சென்னை வந்திறங்கிய போது வாரன் ஹேஸ்டிங்க்ஸ் இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தார். மெக்கென்சி தனது இறுதிக் காலம் வரை அதாவது மே மாதம் 8 ஆம் தேதி, 1821 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்தார்.

38 ஆண்டுகளுக்கு மேலாக தேசப்படங்கள், கல்வெட்டுகள், வரைபடங்கள், நாணயங்கள், அசல் கையெழுத்து குறிப்புகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் தென்னிந்திய மொழிகளில் மற்றும் சமஸ்கிருதத்தில் உள்ள இலக்கியங்கள் ஆகியவற்றில் இருந்து நிறைய தகவல்களை
திரட்டிக்கொண்டார்.

இவர் தென் இந்தியாவிலும் கல்கத்தாவிலும் அதிக நாட்கள் தங்கியிருந்தார். இந்தியாவில் 70,000 சதுர மைல் பயணம் செய்து பல்வேறு பகுதிகளில் கோவில்களைப் பற்றி சிற்பக்கலையை பற்றி, விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, நிர்வாகம், சித்தாந்தம், பல்வேறு அரசர்களின் ஆட்சி களைப் பற்றிய செய்திகளை சேகரித்தார்.

ஒரு கட்டத்தில் அவனுடைய ஆவணங்கள் இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவைகளை நல்லவேளையாக மீண்டும் சென்னைக்கு கொண்டு வர முயற்சி செய்யப்பட்டது. அதன் விளைவாக சில ஆண்டுகள் மெக்கென்சி ஆவணங்கள் ப்ரெசிடென்சி கல்லூரியிலும் சென்னை பல்கலைக்கழகத்திலும் இறுதியில் பேரறிஞர் அண்ணா நூலக கட்டித்ததில் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் குளூ குளூ அறையில் பாதுகாக்கப்படுகின்றன.
 
தொன்மையான கல்வெட்டுகள், நாணயங்கள், தொல்பொருட்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பாலி, சமஸ்கிருதம் என்று ஒவ்வொரு மொழியிலும் உள்ள சுவடிகள் ஆகியவற்றை திரட்டினார்.

மெக்கென்சி-யின் கையெழுத்தான குறிப்புகள் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய புலியூர் கோட்டம் பற்றிய வரலாற்றை பதிவு செய்துள்ளன.
மெக்கென்சியின் குறிப்புகளின் கொடை(பங்கு)யானது பழைய சென்னைப் பகுதியின் வரலாற்றை அறிந்து ஆராய எவ்வளவு உதவி இருக்கிறது என்பதைப் பற்றி போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. இந்தக் குறிப்புகள் மெக்கென்சி 2000 வருடங்களுக்கு முன்பிருந்த வரலாற்றை விவரித்து, அதில் புலியூர் கோட்டம் மற்றும் அதனை ஆண்ட குரும்பர்கள் மற்றும் அவர்களுக்கு பின் ஆண்ட தொண்டைமான் பற்றி பதிவுச் செய்துள்ளார். புலியூர் கோட்டத்தை (சென்னையின் பல பகுதிகள் இதில் அடங்கும், சென்னையின் பழைய பெயர் என்று சொல்லலாம்) பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட காலம் வரை தொடர்ந்து பல மன்னர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள்.

பேராசிரியர் டி.வி. மகாலிங்கம் மெக்கென்சியின் கொடையைப் பற்றி கூறுவதாவது: “கிழக்கு இந்தியக் கம்பெனி யின் பல ஊழியர்கள் போல் இல்லாமல், தங்கப்பாதையை தேடாமல், உலகத்தின் கிழக்கு பகுதியை பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியது, இந்தியாவின் வரலாற்றுத் துறைக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். 
.
மெக்கென்சியின் குறிப்புகள் விலை மதிப்பற்றவை, அவற்றைப் போற்றி (கொண்டாடி) மகிழ தேவையான தகவல்கள் இதில் உள்ளன. மேலும் இதில் உள்ள தகவல்கள் எல்லாம் உண்மையானவை, அவற்றை பின்பற்ற வேண்டும். இவரது முயற்சி பரந்தது மட்டுமில்லை தரமும் கூடியதுதான்.
1,568 இலக்கிய கையெழுத்து சுவடிகள், 2,070 உள்நாட்டின் தன்மை பற்றிய குறிப்புகள், 8,076 கல்வெட்டுத் தகவல்கள், 2,159 மொழிப்பெயர்ப்புகள், 79 ப்ளான்கள், 2,630 வரைபடங்கள், 6,218 நாணயங்கள் மற்றும் 146 விக்ரகங்கள் மற்றும் பல பண்டைய பொருட்கள் ஆகியவற்றை சேகரித்து  விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டார்.

இந்த (மெக்கென்சியால் சேகரிக்கப்பட்டது) முழு அறிவுப் பெட்டகத்துக்கு ஈடு இணை இல்லை. மேலும் இந்த அறிவுப் பெட்டகத்தில் பண்டைய இந்தியாவை பற்றி அறிந்து கொள்ளத் தேவையான அடிப்படை செய்திகள் இருந்தன. இந்தச் செய்திகளை மெக்கென்சியின் கையெழுத்து குறிப்புகள் அல்லது மெக்கன்ஸி தகவல்கள் என்று அழைக்கின்றனர்.

தொன்மையான தமிழகத்தில் சோழ, சேர, பாண்டிய சாம்ராஜ்யங்கள் போல வட தமிழ்நாடு தொண்டைமண்டலம் என்று பொதுவாக அழைப்பர். தொண்டை மண்டல வரலாற்று ஆவணங்கள், சுவடிகள் பலவற்றை சேர்த்து நமக்காக ஆராய்ந்து வழங்கியிருக்கிறார் மெக்கென்சி. தமிழகத்தில் மெக்கென்சி ஆவணங்களின் ஒரு பகுதியாக ‘தொண்டைமண்டல வரலாறுகள்’ எனும் புத்தகத்தை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம் (Oriental Manuscripts Library) வெளியிட்டிருக்கிறது. அதில் ‘தொண்டைமண்டல வரலாறு’  (டி.3927) எனும் பகுதியில் Ancient History of Tondamandalam and its earlier inhabitants called Vedars and Curumbar’  என்ற தலைப்பில் மெக்கன்சி ஆவணம் என்ன கூறுகிறது என்றால் ஆதி காலங்களிலேயே (சென்னை பெருநகர் பகுதியில்) வாழ்ந்த வேடர்களுக்கு பிறகு குறும்பர்கள் ஆட்சி செய்தனர். அவர்கள் குறும்பர் பூமியை நிர்வாக வசதிக்காக 24 கோட்டங்களாக பிரித்து திறமையுடன் ஆட்சி செய்தார்கள்.   
2000 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் ஆட்சி செய்தார்கள் என்பதற்கு ஆங்கிலேயர் மெக்கன்சி ஆவணம் சாட்சி.  ஆனால் இந்த வரலாற்று காலத்தை நாம் ஆராய்வதற்கு முன் ஆதிமனிதன் காலம் முதல் நம் சென்னை பெருநகரின் ஆராய்ச்சியை தொடங்க வேண்டும்.
 
இராபர்ட் புருசு ஃபூட்
இந்தப் பணியில் இன்னொரு ஆங்கிலேயரின் சாதனையை நாம் ஆதாரமாக எடுத்துக் கொள்கிறோம். அவர் தான்  இராபர்ட் புருசு ஃபூட் (Robert Bruce Foote, செப்டம்பர் 22, 1834 - டிசம்பர் 29, 1912) என்பவர் பிரித்தானிய நிலவியல் வல்லுநரும், தொல்பொருள் ஆய்வாளர் ஆவார். "வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா" பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப் போற்றப்படுகிறார். இந்தியாவில், தமிழ்நாட்டில் இந்திய நிலப்பொதியியல் மதிப்பீட்டுக்காக பல கற்கால தொல்லியல் ஆய்வுகள் செய்தவர்.
 
1863 ஆம் ஆண்டில் அவரது தொல்லியல் ஆய்வுகள் ஆரம்பமாயின. முதன் முதலாக பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கோடாரி ஒன்றை தமிழ்நாட்டில் சென்னை பல்லாவரம்/திரிசூலம்  பகுதியில் கண்டுபிடித்தார். இக்கண்டுபிடிப்பின் பின்னர், அவர் வில்லியம் கிங் என்பவருடன் இணைந்து, தென்னிந்திய, மற்றும் மேற்கிந்தியாவில் இவ்வாறு பல பொருள்களைக் கண்டுபிடித்தார். 1884 ஆம் ஆண்டில் 3.5 கி மீ நீள பெலும் குகையைக் கண்டுபிடித்தவர். இது இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள இரண்டாவது நீளமான குகை ஆகும். ஃபூட் மொத்தம் 33 ஆண்டுகள் நிலவியல் ஆய்வுகளை நடத்தினார்.
இராபர் ஃபூட் தனது இந்தியப் பங்களிப்புகளை நினைவுக் குறிப்புகள் எழுதி 12 பாகங்களாக வெளியிட்டார்.
முதல் பழைய கற்காலம் கருவி இங்கே திருசூலத்தத்தில்தான் அவர் கண்டுபிடித்தார்.
 
ஆதிமனிதன்
ஆதிமனிதன் இங்கே சென்னை பெருநகரில் எப்படி வந்தான், எங்கிருந்து வந்தான் என்று திட்டவட்டமாக சொல்ல இயலாது. இருந்தாலும் அவன் ஆபிரிக்காவிலிருந்து உணவைத் தேடி, நீரைத் தேடி, புகலிடம் தேடி, தன்னை வன விலங்குகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள தகுந்த ஆயுதங்களைத் தேடி வந்ததாக யூகிக்கலாம். அப்படி நதியோரம் வந்தவன் கொற்றலையாற்றுப் படுகையில் குவார்ட்சைட் எனும் படிக்கல் கிடைக்கப்பெற்று அதை ஆயுதமாக எளிதில் ஆக்க கூடிய வழியைக் கண்டுபிடித்தான்.
மிருகங்கள் தன்னை தாக்கும் போது பாதுகாப்பிற்காக இந்த கற்கருவி அவனுக்கு உதவியாக இருந்தது. மேலும் மிருகங்களை தாக்கி தனது பசியையும் போக்கிக்கொள்ள இந்த கற்கருவிகள் பயன்பட்டன. எனவே சென்னை பெருநகர் பகுதியில் அவன் தங்கி மேலும் அந்த கற்கருவிகளை காலப்போக்கில் மேம்படுத்தினால் நவீனமாக்கினான். ஒரு குச்சியின் முனையை வைத்து அதை ஈட்டியாகவும் பயன்படுத்தினான்.
‘வரலாற்றில் திருவள்ளூர் மாவட்டம்’ தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் (தமிழ் நாட்டரசு தொல்லியல் துறை, மேனாள் இயக்குநர், கூறுகிறார்:
 
“திருவள்ளூர் மாவட்டம் அத்திரம்பாக்கம் அருகில் ஓடும் கொற்றலை ஆற்றங்கரைகளில் பழைய கற்கால நாகரிகம் மிகச் சிறந்த நிலையில் விளங்கியிருக்கிறது. இவ்வாற்றையொட்டிய குடியம் மலைத் தொடரில் பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்திருந்த 16 மலைக் குகைகள் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் இம்மலைப் பகுதியில் மனிதனின் எலும்பு ஒன்றின் புதைபடிவம் பிரிட்டீஷ் புவியியல் இராபர்ட் புருசு ஃபூட் அவர்களால், 1863 இல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதை ஆய்வு செய்த பஸ்க் (Busk) மற்றும் தவோகிண்ட் (Davokind) என்ற விஞ்ஞானிகள், மனிதனின் கால் எலும்புப் பகுதி என் தீர்மானித்துள்ளனர். இவ்வெலும்பு இங்கு நாடோடியாக வாழ்ந்து வந்த மனிதன் ஒருவன் உடையதாக இருக்கும் என்று கருதப்படுகிறது”.
 
பழைய பாலாறு
 
இங்குள்ள கொற்றலையாற்றுக்கு "விருத்தக்ஷர நதி" என்று பெயர். “பழைய பாலாறு" என்று பொருள். இதன் மூல உருவ இப்பகுதியில்தான் பழமையான பாலாறு ஓடியிருக்கிறது. தற்போது காஞ்சிக்கருகில் காணப்பெறும் பாலாறு, தன் போக்கை மாற்றிக் கொண்டு ஓடும் புதிய பாலாறு ஆகும்.
 
இப்பகுதியில் உள்ள வடமதுரை, நெய்வேலி, பரிக்கல், பூண்டி போன்ற இடங்களிலும் பழைய கற்காலக் கருவிகள் பெருமளவில் கிடைக்கின்றன.
 
1.5 மில்லியன் ஆண்டுகள் (15 லட்சம்)  பழமையான கற்கருவி
 
இக்கற்கருவிகளைக் கொண்டு இதுவரை தோராயமாக சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் இங்கு வாழத் -தொடங்கிவிட்டது என்று முதலில் கருதப்பட்டது. அண்மையில் முனைவர் சாந்தி பப்பு மற்றும் குமார் அகிலேஷ் ஆகிய தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட அகழாய்வுகள் மூலம் 1.5 மில்லியன் (15 லட்சம்) ஆண்டுகள் பழமையான அஷுலியன். வகைக் கற்கருவி அகழ்ந்தெடுக்கப்பெற்றது.
 
“இக்கண்டுபிடிப்பு மிக மிக முக்கியமானதாகும். விஞ்ஞானபூர்வ காலக்கணிப்பான காஸ்மோஜெனிக் நியூக்லைடு பரியல் டேட்டிங் (Cosmogenic nuclide burial dating) முறையில் இந்தக் காலம் நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. அதன் வழி தமிழ்நாட்டில் மனித வாழ்க்கை 15 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்பது வெளிப்படையாகி விட்டது”, என்று திரு காசிநாதன் கூறியிருக்கிறார்.
.
 
அத்திரம்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அஷுலியன் வகைக் கற்கருவிகள் ஹோமோ எரக்டஸ் (Homo Erectus) என்னும் மனித இனத்தால் 16 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டதன் தொடர்ச்சி என்பது மனித இன வல்லுநர்களின் கருத்தாகும். ஆப்பிரிக்க வகை அஷுலியன் வகை கற்கருவியேகூடத் தமிழ்நாட்டில் கிடைக்கக்கூடிய நிகழ்வும் எதிர்காலத்தில் ஏற்படலாம்.
 
தொல் மாந்தர் காட்சியகம்
 
பூண்டியில் தமிழ்நாட்டரசு தொல்லியல்துறை அமைத்துள்ள தொல்மாந்தர் அகழ்வைப்பகம், தொல்மாந்தர்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் (Paleolithic Tools) மற்றும் அவர்கள் தொழில் மாதிரிகள் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது. அதனைப் பார்த்து அறிந்து கொள்வது அவசியம்'' என்று திரு காசிநாதன் மேலும் தெரிவிக்கிறார்.
 
இப்படிப்பட்ட வரலாற்றைக் கொண்ட சென்னை பெருநகரின் வயது 382 ஆம் !!!! (தொடரும்)
 
---  ஆர். ரங்கராஜ்.
தலைவர், சென்னை 2000 ப்ளஸ்  அறக்கட்டளை
9841010821
rangaraaj2021@gmail.com
 

COMMENTS

comments powered by Disqus

PHOTOS

  • test 01

  • test gallery

VIDEOS

  • Viswamitrar lecture by Dr Va Ve Su part 1

  • Old Madras